சோற்றலைகள்..!
உழுது விதை விதைத்து
உள்ள களை தானெடுத்து
அழுத பிள்ளை அமர்த்தாமலே
அக்கறையாப் பாடுபட்டு
வளர்த்த பயிர் வாடி நின்றால்
வாடாதோ கடன் நெஞ்சம்!
காற்றலைகள் நளினம்பாட
நாற்றலைகள் நடனமாட .
கடலைகள் மிஞ்சும் வண்ணம்
கழனியெங்கும் கூத்தாட
சோற்றலைகள் சுமந்து வரும்
தோற்றமுந் தொலைந்ததோ!
நாட்டுப்புறப் பாட்டெல்லாம்
கேட்ட அந்த நாளெல்லாம்
வாட்டந்தீர உழைப்பெல்லாம்
ஈட்ட நல்ல மெட்டெல்லாம்
திரை காணும் அதிசயமாய்
திரிந்ததென்ன சோகமோ!
தண்ணீரோ கண்ணீரோ
உண்ணீரும் பஞ்சமோ!
வெந்நீரோ பாவியரின்
செந்நீரும் நஞ்சாமோ!
அந்நியரும் யாரடா?
இந்தியன் கூறடா!!
ஒன்றியம் இந்தியாவின்
ஓடும்நதி ஏது எல்லை?
ஒன்றுக்கொன்று கைகோர்ப்பின்
என்றுமிங்கு பஞ்சமில்லை.
நன்றொன்று எண்ணுவாரின்
நெஞ்சங்கள் வஞ்சமில்லை.
ஒன்றியம் இந்தியாவின்
ஓடும்நதி ஏது எல்லை?
ஒன்றுக்கொன்று கைகோர்ப்பின்
என்றுமிங்கு பஞ்சமில்லை.
நன்றொன்று எண்ணுவாரின்
நெஞ்சங்கள் வஞ்சமில்லை.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment