Tuesday, 18 February 2014

உழவன்.

ஒரு குயலின் குரல்---உழவன்.!

வெய்யில் குளித்து வியர்வை வடித்து
பைமைசெய் உழவே முதல்கையில்
உயிர்கள் பிழைக்க உணவு வழங்கும்
உழவே உலகின் சிறப்பு.

உண்டும் அளித்தும் உலகை நிறுத்தும்
உழவின் பின்னே மற்றுஅண்டும்
வறுமை வெய்யில் வருத்தா வையம்
உழவு இருத்தும் செயல்.

உழைத்தும் உண்டும் கையேந்தி வாழா
ஒளியா உழவே தலை.மலைத்து
உழவது சோர்ந்தால் உயிர்களும் வாழா
உழவு வாழவும் வாழ்.

மண்ணும் புழுதியா வுணர்த்தி உழுதிட
பின்னு மெதற்கு உரம்.உண்ணும் 
எருவிட்டு ஏரோட்டி நீரிட்டிக்  கட்டபின்
காத்தலின் பாடே நலம்.

மனையா ளன்னத் தினமும் பழக
நிலமுந் தானும் மலர்.முனையக்
கட்டமும் நட்டமும் எண்ணிக் கலங்கின்
வெட்டென நகுமே நிலம்.


கொ..பெ.பி.அய்யா.




கிராம ராஜ்யம்.

கிராமராஜ்யம்

காந்தியின் கிராம இராஜ்யம்
காண்பதுவும் எந்  நாளோ!!
கிராமங்கள் தான்  இந்தியா"
கேட்கத் தான் இனிக்கின்றது"
கிராம உயிர் விவசாயம்...
சிரம் சரியத் துடிக்கின்றது.
.
சேறாக்கக  நீர் இல்லை
சோறாக்க  விற கில்லை
ஏறுகள்  உடைக்கப் பட்டு
விறகு களாக எரிகின்றன
ஆறுகள் தூர்ந்து வறண்டன.
ஆளு  மில்லை கிராமங்களில்

நீரின்றி ஒரு மூலை
நிலம் வறண்ட பாலையோ!
நாடழித்து வெள்ளம் ஓடி 
நிறையும் கடல் கோடியோ!
நதிகளும் இணைவதேப்போ?
நாடு வளம் ஆவதெப்போ?

விவசாயம்  இலாபம்  இல்லை..
விடுத்தனர  உழவுத்  தொழில்.
விளை வித்த  பொருளுக்கும்
விலைவைக்க உரிமை   இல்லை.
விவசாய  இடு   பொருட்கள்
விலையேறிக் கட்ட வில்லை.

கடனாளி ஆகி விட்டார்.
காலனிக்கு கழனி விற்றார்.
இன்னும்  என்ன  செய்திடுவார்..
இடிந்துமே   முடங்கி விட்டார்.
இந்தியாவின்  முது கெலும்பே
இப்பபடியும் நொறுங்க லாமோ!

வழியேதும்  காணலாமோ!.......
வாடிநிற்கும் உழவனையும்
மீட்டெடுக்க  வில்லை  யெனில்
மெலிந் திடாதோ பொருளாதாரம்.
இழந்த வற்றைத் தந்திட்டாலே
எழுந் திடுவான் விவசாயி.

விவசாயிகள் கூடி விற்கும்
விளை பொருள் சந்தைகளை
விரிவாக்கிப் பெருக்கிடுவீர்.
வரவு  செலவுக் கணக்கிட்டு
இலாபம் பார்த்து விற்றிடுவர்
இடைத் தரகர் ஒழிந்திடுவர்.

வேளாண்மை பட்டுப் போனால் 
விலைவாசி முட்ட வரும்.
வாழ வேண்டும் விவசாயம்..
வறுமை செத்துத் தொலையட்டும்..
இடு பொருட்கள் உதவினாலே
ஏற்றம் பெறும் உழவாண்மை.

பொங்கி வரும் காவேரி
தங்காமல் வரட்டுமே
மங்காமல் மின்சாரமும்
எஙகுமே  கிடைக் கட்டுமே.
காந்தி சொன்ன  இராஜ்யமும்
காணு வோம் மகிழுவோம்.

கொ.பெ.பி.அய்யா.


.

கருப்பு வெள்ளை.


கருப்பு வெள்ளை!

கருப்பு வெள்ளை வண்ணங்கள்.
காணும் நிறங்களின் மூலங்கள்
இருளும் பகலும் காட்சிகள்..
இயற்கை அருளிய மாட்சிகள்..

கருப்பபுத் துடைக்க விலகுமே!
இருப்பு வெள்ளை ஒளிருமே !
கருப்புக்குள்ளே வெள்ளையும்.
காட்சி மறைந்து ஒளியுமே!

கருப்பு வெள்ளை சேராமல்
காணும் அழகும் புரியாது.
சேரும் மாசுப் படிவினால்
மாறி வெள்ளை கருக்குமே!.

வானவில்லின் மாயம் போல்!
வரைந்தார் மனித வர்ணங்கள்!
நிறங்கள் காட்டிப் பேதங்கள்!!
நிறுவ முனைந்தர் பாவங்கள். !

உழைப்பவன் வெய்யில் காய்ச்சலில்
உழைத்துக் கருத்தான் வான்வெளியில்.
பிழைப்பவன் உண்டு பிறர் வலியில்
கொழுத்து வெளுத்தான் சுகநிழலில்.

வர்ணங்கள் இணைய நிறமழிந்து
வளரும் வெள்ளை அது போலே
வேற்றுமை தொலைத்த வெண்தாடி
வென்றார் நன்றே சமூக நீதி1

இன்பம் துன்பம் இரண்டுமே
இருப்பதுதானே வாழ்க்கையே.
இடையில் மாறும் மற்றெல்லாம்
ஏற்குஞ்சூழல் நிற மாற்றம்.

மெய்யை மறைக்கும் பொய்களும்,
இயல்பை மறைக்கும் வண்ணங்களும்,
என்றும் நின்றும் நிலைக்காது,
வென்றும் நன்றும் வாழாது.

காலை விடிந்தால் வெள்ளைதான் !
மாலை முடிந்தால் கருப்புத்தான்!
கருப்பு வெள்ளை கணக்கிதுதான்!
காலம் கொடுத்த சமம் இதுதான்!

நிறத்தை மாற்றி வாழாதே!
நிசத்தை மறைக்க முயலாதே!
உனக்கென ஒன்று உள்ளிருக்கும்!
உணர்ந்தால் ஒளரும் உண்மைநிறம்!


கொ.பெ.பி.அய்யா.




சங்கம் மழங்கு.

சங்கம் முழங்குவோம்

சொல்லேர் உழவர் பெருமக்களே!
வல்லார் நீவீர் வயல் இவ்வுலகில் 
நல்லார் விளைய நயம் பெற உழுது 
பொல்லார் கட்டு புரவலம் செய்து 
எல்லார் மனத்தும் இருந்து வாழ்ந்து 
தொல்லார் பெருமை துலங்கச்செய்வீர்!
பொங்கும் பொங்கலாய் பொங்கும் மங்களம்
எங்கும் தங்கிட பொங்கல் பொங்கட்டும்.    
பங்கம் மங்கவும் துங்கம் ஓங்கவும்
சங்கம் முழங்குவோம் பொங்கல் பொங்கட்டும்.
உணவு செய்பவன் கனவு கனியவும்
மனது மகிழவும் பொங்கல் பொங்கட்டும்.
மனித அணைகளும் உணர்ந்து திறந்தும்
மனிதம் வாழவும் பொங்கல் பொங்கட்டும்.

கொ.பெ.பி.அய்யா.

பொங்கல் பொங்கட்டும்.

பொங்கல் பொங்கட்டும்.

பொங்கும் பொங்கலாய் பொங்கும் மங்களம்
எங்கும் தங்கிட பொங்கல் பொங்கட்டும்.
பங்கம் மங்கவும் துங்கம் ஓங்கவும்
சங்கம் முழங்குவோம் பொங்கல் பொங்கட்டும்.

உணவு செய்பவன் கனவு கனியவும்
மனது மகிழவும் பொங்கல் பொங்கட்டும்.
மனித அணைகளும் உணர்ந்து திறந்தும்
மனிதம் வாழவும் பொங்கல் பொங்கட்டும்.

காட்டில் வாழ்ந்த கூட்டு வாழ்வும்
நாட்டில் பேணவும் பொங்கல் பொங்கட்டும்
காட்டு விலங்காய் காமம் மீறும்
கோட்டி மாறவும் பொங்கல் பொங்கட்டும்.

கடமை மறந்து கையை நீட்டும்
கசடர் தீரவும் பொங்கல் பொங்கட்டும்.
உடமை சேர்க்க ஊரார் பறிக்கும்
முடவர் வருந்தவும் பொங்கல் பொங்கட்டும்.

உழைத்து வாழ்வோம் என்னும் உணர்வும்
உலகம் பழகவும் பொங்கல் பொங்கட்டும்.
களைத்த உழவன் உழைத்த பரிசாம்
பிழைத்து வாழவும் பொங்கல் பொங்கட்டும்.

கொ’பெ.பி.அய்யா.

கனவு காணுங்கள்.

கனவு காணுங்கள்

கனவு நன்றே காணுங்கள்
குழந்தைகளே தூங்குங்கள்.
புது உலகைப் படைத்திட
புதுக் கனவு காணுங்கள்

ஏழ்மை யில்லா உலகினை
ஏற்றக் கனவு காணுங்கள்.
பாழ்மை யில்லா படைப்புகளை
படைக்க் கனவு காணுங்கள்.

செயற்கை யில்லா வேளாண்மை
செய்யக் கனவு காணுங்கள்.
தரிசு இல்லா பூமியாக
தழைக்கக் கனவு காணுங்கள்

அறியாமை நீங்கி உலகு
அமையக் கனவு காணுங்கள்.
பகையறியா ஞாலமாக
பசுமைக் கனவு காணுங்கள்.

சுயநலம் இல்லாச் சுற்றம்
சூழக் கனவு காணுங்கள.
பயம் மறந்த விடியலை
பாரக்கக் கனவ்வு காணுங்கள்.

நதிகளெலாம் கைகோர்க்கும்
நாளைக் கனவு காணுங்கள்.
அதிகாரஞ் செயலாக்கும்
அரசைக் கனவு காணுங்கள்.

ஊழல் செத்த நிர்வாகம்
உதிக்கக் கனவு  காணுங்கள்.
ஊழியரும் மக்கள் நிலை
உணரக் கனவு காணுங்கள்.


வேலை தேடும் அவலநிலை
விலகக்க் கனவு காணுங்கள்.
உழைக்காத வெட்டிக் கூட்டம்
உழைக்கக் கனவுகாணுங்கள்.

சலுகை  விரும்பா சமுதாயம்
 சமையக் கனவு காணுங்கள்.
 ஓட்டுக்கான இலவசங்கள்
ஒழியக் கனவு காணுங்கள்.


பிச்சை இல்லாப் பேறுலகு
பிறக்கக்னவு காணுங்கள்.
நடைபாதைக் குடும்பம் இல்லா
நாடைக் கனவு காணுங்கள்.

எல்லாரும் எல்லாம் பெற்ற
இயல்பைக் கனவு காணுங்கள்.
திருடரில்லா தீர்வுநிலை
தேரக் கனவு காணுங்கள்.


சாதி மத பேதஞ் சாகும்
சமயம் கனவு காணுங்கள்.
நீதிகூறுஞ் செய்திகளே
நிலவக் கனவு காணுங்கள்.

பாலினக் கொடுமை செய்யா
பாரைக் கனவு காணுங்கள்,
உயிர பறிக்கும் பாவமில்லா
உலகைக் கனவு காணுங்கள்.

காந்தி காமராசர் களை
கனவிலா வது காணுங்கள்.
குழந்தைகளேதூங்குங்கள்
கூவும் வேளை விழியுங்கள்.

கொ.பெ.பி.அயயா






உழுதவன் பாடு.

உழுதவன் பாடு.

உழுதவனை நினைக்கிறேன்.
தொழுதவனை வியக்கிறேன்.
பொழுதவன் பட்ட பாடு
விழுதவன் விட்ட நாடு.

ஒருவர் ஊருக்கு முதலாளி--அந்த
ஒருவர் வாழவே தொழிலாளி.
உழைப்பைச் சுரணடிய பெரிச்சாளி--அது
ஒழிநததால் உயர்ந்தான் பாட்டாளி.

நாளும் உழைப்பான் உழைப்பாளி-வெறும்
நாழித் தானியக் கூலிக்கு.
காரி உமிழ்வான் முதலாளி---வெந்த
காய்ப்பு இல்லாக் கைகளில்.

கோவணம் உழவன் சீருடை-ஓலைக்
குடிசை அவனது சுகவாசம்.
வெயிலும் காற்றும் உறவாகும்--ஒழுகும்.
வேர்வைக் குளியல் அடையாளம்.

சோற்றுக்கு அழுவான் பிள்ளை-துணி
மாற்றுக்கு ஒளிவாள் மனைவி
அழுகை யதுவே மொழியாச்சு---அன்று
உழுதவன் பாடே இதுவாச்சு.

உழப்பை உறிஞ்சி உண்டோனோ---இன்று
பிழைப்பைத் தேடி ஓடுகிறான்.
காலச் சக்கரம் உருண்டது---பழமை
காடசியும் மாறிப் புரண்டது.


கொ,பெ.பி.அய்யா.







சோறு சும்மா வரவில்லை.

சும்மா வரவில்லை சோறு !

அம்மா தருஞ்  சோறு!
சும்மா வரல சாரு!!.
அதற்குப் பின்னால் பாரு!
அடங்கியிருக்கு நூறு.!

ஆதிமனிதன் யாரு!
அவன்கொடுத்தான் சோறு.!.
எதையெதத்தான் திண்ணானோ!
எத்தனை பேர் செத்தானோ!

ஒன்னொன்னாத்தான் தேடித்தான்.
மென்னு திண்ணு பார்த்துத்தான்.
உண்ணலானு சொன்னதத்தான்
உண்ணுகிறோஞ் சாமி!

நெருப்புக்கண்ட பின்னாலே
பருப்பு வேககக் கண்டானே .
தரிசக்கொத்தி விதைவிதைச்சி
தானியங்கள் கொண்டானே .

அம்மா தருஞ்  சோறு!
சும்மா வரல சாரு!!.
அதற்குப் பின்னால் பாரு!
அடங்கியிருக்கு நூறு.!

பொறுமை.

பொறுமையுடன் வாழ்க

உழைக்கத்தானே  உடம்பிருக்கு
பிழைக்கத்தானே  வாழ்விருக்கு
கவலைக்கென்ன தேவையிருக்கு
அவலங்கள் நிகழ்வதற்கு..!

திட்டமிடாச் செலவினங்கள்,
வட்டம் மிஞ்சுந்திட்டங்கள்,
தேவையிலா ஆடம்பரங்கள்,
ஆவதாலே சங்கடங்கள்.

வரவினைக் கணக்கிலிட்டு
செலவினைத் திட்டமிட்டு
நிறைத்திட வாழ்ககையில்
நேருமோ துன்பங்கள்!

திட்டமாய் அடியெடுத்து
எட்டுவதைக் குறிவைத்து
கிடைப்பதைத் தேடினால்
கூடுமோக் கேடுகள்.!

நிலையினை உணர்ந்திட்டு
விலையினை தேர்ந்திட்டு
கடன்படாக் கரந்தொட்டால்
காணுமோ சிறுமைகள்!

பெருமைக்கு மாவிடித்து
வறுமைக்குள் சிக்காமல்
பொறுமையுடன்  வாழுங்கள் !
அமையுமே வாழ்வுகள்.!.



கவிஞர்.கொ.பெ.பிச்சையா

உழவே தலை.

உழவன்.!

வெயிலிற் காய்ந்தவன் வேர்வை நனைவான்
உழவன் உலகின் முதல்.

உயிர்களைக் காப்பான் உணவை கொடுப்பான்
உழவன் உலகிதின் அச்சு.

உண்டும் அளித்தும் உலகினைக் காக்கும்
உழவின் பின்னது மற்று.

வறுமை வெயிலது வாட்டாது வண்ணம்
வையினைக் காக்கும் உழவு.

உழைத்துத்தான் உண்டு ஒளித்தும் பிழைக்காது
ஊழிற் குதவும் உழவு..

சோர்ந்து உழவது வீழ்ந்து கிடந்திட்டால்
தீரும் உலகின் உயிர்.

மண்ணும் புழுதியாக பேணி உழுதிட
பின் னெதற்கு உரம்.

ஏரோட்டி எருவிட்டு நீரிட்டுக் கட்டப்பின்
காத்தலினும் பாடே சிறப்பு.

தினந்தினம் பேணவே மனையாள் சிரிப்பாள்
நிலமும் மனையாள் போல்.

கட்டமோ நட்டமோ எண்ணிக் கலங்கினால்
கொட்டி நகுவாள் நிலம்.
.

வள்ளுவன் போற்றிய உழவனின்று
வாடுகின்றான் நீரின்றி
வரப்பில் நின்று கதறுகிறான்
கருகும் பயிரது நிலை கண்டு
தாங்கா மனதில் ஏங்குகிறான்
தற்கொலை செய்தும் மடிகிறான்
பிள்ளையாக வளர்த்தவனுக்கு
பேரிழப்பன்றோ என்செய்வான்.
காவேரித்தாயும் துடிக்கின்றாள்
கைதாகிவிட்டாள் பாவமவள்.!

கொ..பெ.பி.அய்யா.





இலவசம்.

இலவசம்!

கொடுப்பதெல்லாம் இலவசமென்றால்
உழைக்குமவசியம் இருக்காது.
இருப்பதெல்லாம் பொதுவென்றால்
கொடுக்கும் வேலை இருக்காது!

இருப்பது தீர்ந்து கொடுப்பது  ஒழிந்தால்
எடுத்திடப்பிச்சையும் கிடைக்காது.
கவிதைகள் மட்டும் இலவசப்பொருளாய்
காற்றிலையும் தேடாது!

உழைத்திடுந்தேவை உணர்ந்தாலே
ஊரும் வாழும் அழியாது.
வளர்த்திடுங்கடமை அறிந்தாலே
வளரும் நாளை நல்லது!

புள்ளிகளாவது தந்திரமென்றால்
பூஜ்யங்களோ இலவசமே!
உயர்த்தும் ஒன்றோ உழைப்புத்தான்.
வியர்த்தாலாகும் வெற்றியே!



கொ.பெ.பி.அய்யா.