Saturday, 13 December 2025

தென்றல் விடு தூது.

தென்றல்விடு தூது!!

தென் திசை தென்றலே
தேன் சுமந்து சீதனமோ!
தமிழ் அவளைக் காணவே.
தனியாகப் பயணமோ!.
வட திசை நோக்கியே
வழக்க மான உலாவோ!
பொதிகை மலை புறப்பட்டு.
போகும் வழி தூரமோ!

அகத்திய முனிவ ரவர்
ஆசிரம சேவ கனோ!
இகத்தினில் தழிழ் தந்த
இறைவனின் ஏவலனோ!
சுகம் தரப் பிறந்தநீ
சுரந்து வரும் ஆவலனோ!
யுக நலமாய் தமிழுக்கு
உகந்த சுகக் காவலனோ!

தாமிர வரணி ஆற்றில்
தலை மூழ்கிக் குளித்துமே
தேமதுர தமிழ் அணங்கை
தேடி நீயும் செல்வாயோ!
குற்றாலச் சாரலிலே
குளிர்ந்து நீயும் சுகமாக
அருவி யெலாம் நீராடி
அப்புறமே தொடர் வாயோ!

நெல்லையில் அல்வாவும்
நீ வாங்க மறப்பாயோ!
எல்லையில் காந்திமதி
இறங்கி நீ தொழுவாயோ!
நெல்வயல் நீண்டவழி
நெடும் பயணம் கடந்துமே
செல்வனவன் செந்தூரான்
சேவடிகள் தரிசனமோ!

அலை வாயில் கடலாடி
ஆண்டவனை கலந்தாடி
அங்கிருந்தே குமரியவள்
தங்கவொளி சேவிப்போ!
செங் கதிரோன் தங்கியே
தூங்கி யெழும் காட்சியோ
பொங்கும் நல் புத்துணர்வோ!
அங்கந் துள் அகமகிழ்வோ!

உவரி வந்து மாதாவை
உளங்கனிந்து செபித்துமே
காயல் பட்டண தர்காவிலே
காலாற்றி தொழுதுவிட்டு
வெற்றிலைத் தோட்டங்களை
சுற்றியும் சுவை மணந்து
முற்றிய பலா வாழைமா
பற்றி உடன்  கொண்டுவா!

ஆழக்கடல் தூத்துக்குடி
ஆழத்தில் முத்தெடுத்து
ஈழக்கடல் வீரத்தமிழ்
ஏந்தி நீ முத்தாடி
வாழுந்தமிழ் சிதம்ரனார்
விட்ட கப்பல் தடம் பார்த்து
கீழக்கரை மீனவரை
கண்டு காயம் ஆற்றி வா!

பாதை யெலாம் உப்பளங்கள்
பரவியே பளபளக்கும்.
வேதனையில் தொழிலாளர்
வெந்து புண்ணில் வருந்துவர்.
ஊதியே புண்ணாற்றி
உழைப்பவரை தேற்றியே
நாதியாய் நீ அவர்க்கு
நல்லூக்கம் ஊட்டி வா!.

வரும் வழி மணியாச்சி
வாஞ்சியவன் முறுக்காச்சி.
கடம்பூரு போலி வாங்கி
கடந்து வா கொல்லநகர்.
கொல்லம்பரம்பு நல்ல நீர்
குடிக்க சுவை வெல்ல நீர்.
குறுக்குச்சாலை சேவு திண்ணு
குடித்துப்பார் வாய் மணக்கும்.

சுற்றியுள்ள ஊரெல்லாம்
சுதந்திர விளை பூமி.
பற்றி வா தேசப்பற்று
பரப்பியே தேசமெல்லாம்.
பாஞ்சாலம் ஓட்டப்பிடாரம்
பக்கமே எட்டையபுரம்
வ.உசி கட்டபொம்மன்
வாழும் பாரதி அறிந்துவா!

கர்மவீர்ர் காமராசர்
கண்ட ஊர் விருதுநகர்.
பரம ஏழை பாதம் தொட்ட
பழைய மண் எடுத்துவா!
தென் தமிழ் நாடெல்லாம்
தேடித்தேடிக் கண்டு வா!
சுதந்திர சுவாசமாய்
சுத்தமாகி பரந்து வா!

பக்கம்தான் மதுரையும்
பழம் தமிழ் சங்கத்தூர்.
நிற்குமே நாவில் சுவை
நிற மல்லி இட்லி துவை.
திக்கெல்லாம் கோபுரங்கள்
தேவிமீனாள் மகிமைகள்.
சொக்கனாதன் தடாகத்தை
உக்கி போட்டு மூழ்கி வா!

ராமநாதன் பூமிகண்டு
சேமநாடு சேதுபந்தம்
தஞ்சை மண்ணும் தாண்டியும்
தமிழருமை கண்டாயோ!
காவிரியில் தாகமாற்றி
கல்லணை கவியேற்றி
பாவிரி களஞ்சியங்கள்
பார்வையிட்டும் மகிழ்ந்தாயோ!

திருவரங்கம் கண்டாயோ!
பெருமாளைத் தொழுதாயோ!
கோபுர அழகதனை
கூவி நீ புகழ்ந்தாயோ!
வீர நாச்சி பூமிகண்டு
தீரன் சின்ன மலைபுகழ்ந்து
கொங்கு நாடு தமிழ் மணந்து
குளிர் நிறைந்து வருவாயோ!

வரும் வழி ஈரோடுதான்
பெரியாரின் பூமியது
சுயமரியாதை கற்றும்
சேலம் மாங்கனி கொண்டும்
காஞ்சிபுரம் வந்தாயோ!
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
உடைமையது பற்றினாயோயோ!
உடன்பிறப்பும் ஆகினாயோ!

சென்னைக் கோட்டை தலைவாசல்
தன்னைப் போற்றி நுழைந்தாயோ@
முன்னைப் புகழ் கூவநதி
இன்னை மணம் நுகர்ந்தாயோ
வங்கக் கடல் மெரினாவில்
சிங்கமவன் அண்ணாவுடன்
தங்கமகன் எம்ஜியாரும்
கண்ணுறங்கப் பாடினாயோ!

நாடெல்லாம் சுற்றி நீ
காடெல்லாம் பறந்தாயோ
நதியெல்லாம் ஆடி நீ
விதி யொன்றும் புரிந்தாயோ!
விவசாய பூமி இது
அவசரம் தேவை அது
இணைத் தெல்லா நதிகளும்
அணைக் கெல்லாம் நிறப்பணும்.

போதுமோ சுற்றுச்சூழல்!
பூமியிது வாழ்வதற்கு!
எதிர் காலம் என்னாகும்
என்பதும் ஆய்ந்து சொல்
பசுமை பரந்து வளமாக
வறுமை அகன்று நலமாக
புதுமை கண்டு துணிவாக
புறப்படச் சொல் விரைவாக!

கொ.பெ.பி.அய்யா.

தூக்கமில்லை.

தூங்க மனம் கூடவில்லை.

கோணல் ஆன வண்ணஜால வில்லொன்று
வானம் முட்டி வளைந்துதான் கிடக்குது.
நானதை நிமிர்த்தலாம் என்று தானே
தூண் கொண்டு ஓடியோடித் தேடுகிறேன்.

அடைப்பட்டக் கடல் ஒன்று விடுவென்று
ஆகாயத்தில் கண்நீரைச் சிந்து தென்று .
உடைத்துமே மீட்டெடுக்க வெட்டி கொண்டு
உந்துஞ் சிறகு வேண்டித்தான் பாடுகிறேன்`

கோடிகோடி சக்தி கொண்ட மின்னல்கள்
கூடாமல் வீணாகித் தான் தொலையுது. 
கூட்டியதைக் கொண்டு வந்து ஒளிதர
கோட்டி யானை மதமாகி அலைகிறேன்.

பகல்வருஞ் சூரியனைப் பிடித்து வைக்க
திகார் சிறைப் பார்த்து வரப்போகிறேன்.
சகலமும் அவனால் சாதிக்க முடியுமென
புகல்வது அறிகிறேன் நிகழவழி வரிகிறேன்.  

நிலவும் கூட நிலையின்றி முறையின்றி
அழகு வதனத் தலைக்கனத்தால் அடக்கமின்றி
திரிவதை வழிமறித்து திருத்துமொழி நானுரைத்து
வருத்துவழி யாதெனவும் ஆய்ந்துமே வருந்துகிறேன்.

எத்தனைக் கோடிகள் முத்தொளி வைரங்கள்
அத்தனையும் பயனின்றி விண் மயங்கி
இருந்தும் இல்லாமல் பொருந்தாத விண்மீன்கள்
இரக்கியவை ஒளிபொழிய என்னவழி யோசிக்கிறேன்.

விரிந்து கிடக்கும் கடலைக் கண்டால்
புரிந்து கொள்ள முடியவில்லை.ஆனாலும்
தெரிந்து கொள்ள கடலொன்று சொன்னது
அறிந்துதான் உப்பானேன் ஆராய்ந்து தேடென்றது

எமக்குத் தந்த இயற்கைச் செல்வங்கள்  
எட்டி நின்றே ஏய்த்து எம்மை
ஏங்க வைத்தும் வதைப்ப தென்ன?
தூங்கமனம் கூடவில்லை புதுமை செய்வோம்!
   
கொ.பெ.பி.அய்யா.


அவலங்கள்.

அவலங்களின் வலி

அவலங்கள் தாங்கிச் சுமக்கும்.
அதுவும் வீங்கிக் கனக்கும்.
உள்ளம் அப்போது வலிக்கும்.
ஒரு நாள் புரடசியும் வெடிக்கும்.

வறுமை முதுமைத் தனிமை.
வன்மைக் கொடுமைத் தீமை.
சமூக நீதி மறுப்பிழிமை
சரித்திரம் புறட்டும் கருப்பறிமை.

பலப்பல அடுக்கின் கோபுரம்.
கலசமாய் ஒரு சிலர் வாழ்வளம்.
தளத்துன்பப் பாமரன் சுமை தாங்கும்
களம் படும் அவலப் பாவச் சமூகம்.

உணவின்றி நீரின்றிக் காற்றுமின்றி
கனவின்றித் துஞ்சக் காலமுமின்றி
இடை மொத்தச் சமூக இரக்கமுமின்றி
கடைக்குடி நைகிறான் கேட்பாரின்றி.

காலம் இதுவும் கடந்து விட்டால்
கோலம் அவன் நிலை மறந்திட்டால்
தூலம் முறிந்து பிரளயம்போல்
சீலம் புறண்டு ஞாலம் தூள்.

வலிகள் ஆய்ந்து வகை காண்பீர்!
பலிகள் ஓய்ந்த தகை ஓம்பீர்!
துளியினித் தாமதம் துயரம்தான்.
எளியவன் பாவம் சாபம்தான்.

வரலாறு சொல்லும் அனுபவங்கள்
புரளாது கொள்ளும் நியாயங்கள்.
திரும்பும் தீக்கணைப் புரட்சியங்கள்
விரும்பும் பூக்கணை விடயங்கள்.

பூவொன்று புயலாய்ச் சீறுமுன்
மேவிப் பரவிச் சேருமுன்
தேவைகள் உணர்ந்து தீர்ப்பாரார்?
தேவனவனேப் புவிக் காப்பார்.

சிரிப்பும் அழுகையும்.

சிரிப்பவர் யார்-அழுபவர் யார்.

அழுகையும் சிரிப்பும்
அமைந்தது வாழ்க்கை.
அதையும் மறந்தால்
அடைவது இயற்கை.

அழுகையில் ஜனனம்.
அழுகையில் மரணம்.
இடையில் கலப்படம்
இதுதான் அனுபவம்.

அழுகையும் சிரிப்பும்
ஆறாம் அறிவாம்.
உணர்வுகள் மொழியும்
உன்னத வழியாம்
அதுதான் சிறப்பு
மனிதனின் பிறப்பு.

அழவிட்டு வாழ்வான்
அவன் மட்டுஞ் சிரிப்பான்.
ஒரு நாள் அவனும்
உலகினைக் கடப்பான்,
அதுதான் திருநாள்
அகிலம் சிரிக்கும்.

ஏழையின் சிரிப்பில்
இறைவனைக் காண்பான்.
தனக்கென வாழான்
தர்மத்தின் மரணம்
புவி தன் இழப்பாய்
பொங்கி அழுகும்.

வாழ்ந்தவன் வாழ்க்கை
வசதியில் இல்லை.
உனக்காய் ஊரார்
ஒருத் துளிக்கண்ணீர்
அழுது சிந்தினால்
அதுதான் வாழ்க்கை.

இன்பம் சிரிக்கும்
ஏழையின் குடிலில்.
துன்பம் அழுகும்
மாளிகை அரணில்
வளமை அழுதால்
வறுமை சிரிக்கும்.

கதவுகள் இல்லாக்
காவலுஞ் சிரிக்கும்.
பூட்டுக்குள் முடங்கும்
பொக்கிசம் அழுகும்.
காப்பவன் அழுவான்
பார்பபவன் சிரிப்பான்.

சிரிப்பது உடலின்
செழுமைக் காக்கும்.
அழுகை அருமைக்
கண்ணீர் உதிர்க்கும்
சிரித்தால் லாபம்
அழுதால் பாவம்.

சிரிப்பவர் யாரோ!
அழுபவர் யாரோ!
அவரவர் தீர்ப்புச்
செயலில் இருக்கு.
பாவ புண்ணியம்
பார்த்திடுங் கணக்கு.அழுகையும் சிரிப்பும்
அமைந்தது வாழ்க்கை.
அதையும் மறந்தால்
அடைவது இயற்கை.

அழுகையில் ஜனனம்.
அழுகையில் மரணம்.
இடையில் கலப்படம்
இதுதான் அனுபவம்.

அழுகையும் சிரிப்பும்
ஆறாம் அறிவாம்.
உணர்வுகள் மொழியும்
உன்னத வழியாம்
அதுதான் சிறப்பு
மனிதனின் பிறப்பு.

அழவிட்டு வாழ்வான்
அவன் மட்டுஞ் சிரிப்பான்.
ஒரு நாள் அவனும்
உலகினைக் கடப்பான்,
அதுதான் திருநாள்
அகிலம் சிரிக்கும்.

ஏழையின் சிரிப்பில்
இறைவனைக் காண்பான்.
தனக்கென வாழான்
தர்மத்தின் மரணம்
புவி தன் இழப்பாய்
பொங்கி அழுகும்.

வாழ்ந்தவன் வாழ்க்கை
வசதியில் இல்லை.
உனக்காய் ஊரார்
ஒருத் துளிக்கண்ணீர்
அழுது சிந்தினால்
அதுதான் வாழ்க்கை.

இன்பம் சிரிக்கும்
ஏழையின் குடிலில்.
துன்பம் அழுகும்
மாளிகை அரணில்
வளமை அழுதால்
வறுமை சிரிக்கும்.

கதவுகள் இல்லாக்
காவலுஞ் சிரிக்கும்.
பூட்டுக்குள் முடங்கும்
பொக்கிசம் அழுகும்.
காப்பவன் அழுவான்
பார்பபவன் சிரிப்பான்.

சிரிப்பது உடலின்
செழுமைக் காக்கும்.
அழுகை அருமைக்
கண்ணீர் உதிர்க்கும்
சிரித்தால் லாபம்
அழுதால் பாவம்.

சிரிப்பவர் யாரோ!
அழுபவர் யாரோ!
அவரவர் தீர்ப்புச்
செயலில் இருக்கு.
பாவ புண்ணியம்
பார்த்திடுங் கணக்கு.


கொ.பெ.பி.அய்யா.